கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை; உதவி பேராசிரியர் தலைமறைவு!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:21 IST)
சென்னை கலாஷேத்ரா நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மற்றும் 3 பேர் மீது புகார் உள்ளது. இந்த வழக்கில் ஹரி பத்மனை இன்று கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், கலாச்சார நிகழ்ச்சி ஒன்றிற்காக மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் தலைமறைவாகிவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமறைவான ஹரி பத்மனை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்