வைகோ எம்பி பதவி தப்புமா? இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதால் பரபரப்பு!

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பொறுத்தே அவரது எம்பி பதவி நிலை தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது
 
 
கடந்த 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கொண்ட ஒரு கடிதத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வைகோ கடிதம் எழுதியதாக அப்போதைய தி.மு.க அரசு, வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடர்ந்தது. 
 
 
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதால் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு விசாரணை, சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை ஆகியவை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது
 
இந்த வழக்கில் இன்று வழங்கப்படும் தீர்ப்பில் ஒருவேளை வைகோவிற்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவர் வகிக்கும் ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படுமா?, என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பரப்புதல் சட்டப்பிரிவு, 499 மற்றும் 500 கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
திமுக வழங்கிய ராஜ்யசபா பதவி, திமுக தொடர்ந்த ஒரு வழக்கால் பறிக்கப்படுமா? என்பது இன்றைய தீர்ப்பில் தான் அடங்கியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்