தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் அவருடைய பல சொத்துக்களுக்கு அவருடைய கை ரேகை உருட்டப்படுகிறது என திமுக குற்றம்சாட்டியுள்ளது.
தர்மபுரியில் நடந்த திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப்பொதுசெயலாளர் துரைமுருகன் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது பேசிய துரைமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர்கள் பலர் ஆட்சியை விட்டு சென்றுள்ளனர். தற்போது அதிமுக அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும்.
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். அவர் தானே எழுந்து உணவு உண்ணுகிறார், பேசுகிறார் என்றெல்லாம் அதிமுகவினர் சொல்கிறார்கள். அப்படியென்றால் வேட்பாளருக்கு சின்னம் வழங்க ஏன் ரேகை உருட்டினார் என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவருக்கே தெரியாமல் பல சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் ரேகை உருட்டப்படுகிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்திய துரைமுருகன் ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும் கூறி மேலும் பரபரப்பை கூட்டினார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன் இன்னும் ஆறு மாதத்தில் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் என கூறினார்.