தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி இரவில் இருந்தே அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பே இருந்து வருகிறது.
15 நாட்களாகியும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. தொடர் சிகிச்சையில் உள்ளார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் நாட்கள் ஆக ஆக அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்தார். இதனால் சந்தேகங்கள் வலுத்தது. முதல்வருக்கு என்ன ஆனது என்ற பதற்றம் உருவாகியது.
முதல்வரின் புகைப்படம் வெளியிடப்பட வேண்டும் அல்லது அவர் வாட்ஸ் ஆப் மூலம் தமிழக மக்களிடம் பேச வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. காய்ச்சல் என்ற பெயரில் வந்த அறிக்கை நோய் தொற்று என மாறியது. பின்னர் தேவைப்படும் போது செயற்கை சுவாசம் அளிக்கிறோம் என்ற தகவலும் அறிக்கையில் வெளியே வந்தது.
முதல்வர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை, அரைத்த மாவை அரைப்பது போலவே அதே அறிக்கைகள் தான் திரும்ப திரும்ப வருகிறது. என்ன ஆனது முதல்வருக்கு, அவர் மீண்டும் வர வேண்டும், நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர் கட்சியினர்.
தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்தான வதந்தி மின்னல் வேகத்தில் பயணிக்கிறது. இன்று நடைபெறும் இந்த காட்சிகள் 32 வருடங்களுக்கு முன்னரும் நடந்தது. அதே வரலாறு தற்போது திரும்புகிறது போல் உள்ளது. கிட்டத்தட்ட பல விஷயங்கள் அன்று நடந்தது போல் உள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தனது 68-வது வயதில் அக்டோபர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவும் தனது 68-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பொழுதும் எம்.ஜி.ஆர் உடல் நலம் குறித்தான தகவல்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மறைக்கப்பட்டு வந்தன. பின்னர் அவரது உடல் நலம் குறித்து வதந்திகள் பரவியது, அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பின. பின்னர் அவரது உடல் நலம் குறித்து அரசு சார்பிலும் மருத்துவமனை சார்பிலும் தொடர் அறிக்கைகள் வந்தன. எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டன.
தற்பொழுதும் முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகள் வருகின்றன, ஆனால் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக முதல்வர் குறித்தான நம்பகமான தகவலை அரசோ, மருத்துவமனையோ சொன்னதாக இல்லை. மருத்துவமனை வெளியிடும் அறிக்கை எல்லாம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆர்.க்கு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டு வந்த அவர் மீண்டும் முதல்வராக பதவி வகித்தார்.
அதே போல தற்போது உடல் நலக்குறைவால் அவதியுறும் முதல்வர் ஜெயலலிதாவும் முழு உடல் நலம் பெற்று மீண்டும் மக்களை சந்தித்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.