சசிகலா செய்த பல தொழில்கள் ஜெ.விற்கே தெரியாது - ஓபிஎஸ் ஒபன் டாக்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (15:48 IST)
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் செய்து வந்த பல தொழில்கள் மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவிற்கே தெரியாது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார்.


 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ் கூறியதாவது:
 
எனக்கு புதிய கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. அதேபோல், சசிகலா தரப்பு கூறுவது போல் எனக்கு பின்னால் திமுக, பாஜக போன்ற எந்த கட்சியும் இல்லை. முக்கியமாக, சசிகலா தற்போது தற்காலிக பொதுச்செயலாளராகவே நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, என்னை பொருளாலர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை...
 
அதிமுக எம்.ல்.ஏக்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்காக அவர்கள் தொகுதி வாரியாக நேரில் சென்று அவர்களிம் பேச வேண்டும்.
 
என்னை கட்டாயப்படுத்திதான் சசிகலா தரப்பு  ராஜினாமா கடிதத்தை வாங்கியது. அதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்ற நிலைமைக்கு என்னை அவர்கள் கொண்டு சென்றனர்.
 
சசிகலா செய்த பல தொழில்கள் ஜெயலலிதாவிற்கு தெரியாது. சசிகலா தலைமைக்கு கீழ் மட்டத்திலிருந்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 
 
ஜெ. இருக்கும் வரை என்னை அருகில்தான் அமர வைப்பார். ஆனால், என்னை கீழே எதிர் வரிசையில் அமர வைத்து அவமானப்படுத்தினார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலைக்கு அவர்களே காரணம். விரைவில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசுவேன். நானே மீண்டும் முதல்வராக வேண்டும் என மக்கள் விரும்பினால், என் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்