மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டிற்கு அருகில் டீ கடை நடத்தி வரும் மணி என்பவர், ஜெ.வுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
நான் அம்மாவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில், சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்து கொண்டிருப்பேன். அம்மாவின் வீட்டு வாசலில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு டீ விற்பனை செய்வேன்.
அப்போது அம்மாவிடம் உரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் டீ கடை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்தார். அதன்பின் 2 முறை, மாநகராட்சி அதிகாரிகள் என் கடையை அகற்றுமாறு கூறினார்கள். ஒரு முறை நான் நேரில் சென்று அவரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பின் அங்கு கடை வைக்க அனுமதி அளித்தார்.
மற்றொரு முறை, அவரே என்னை நேரில் அழைத்து, “என்ன மணி உன் கடை எங்கே?” என உரிமையுடன் விசாரித்தார். அகற்ற சொல்லிவிட்டார்கள் என்று நான் கூறியவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.
நான் வாழும் வாழ்வு அவர் தந்தது. அவர் தற்போது இல்லாதது எனக்கு மிகவும் துயரத்தைத் தருகிறது” என்று அவர் கூறினார்.