பச்சை கொடி ஏன் காட்றோம் தெரியுமா? - புது விளக்கம் கொடுத்த ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:50 IST)
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவரை பச்சைக்கொடி வரவேற்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 
வருகிற 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும் போது, அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
 
அந்நிலையில், திமுகவினர் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசுக்கு ஏன் பச்சைக்கொடி காட்டுகிறீர்கள்? வேண்டுமானால், காவிக்கொடியை காட்டி உங்கள் விசுவாசத்தை காட்டுங்கள் என பலரும் பொங்கி எழுந்தனர்.

 
இந்நிலையில், இதுகுறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் “அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து. ஆனால், தேசிய கொடியில் உள்ள பச்சை நிறம் என்பது விவசாயத்தை குறிக்கும். பச்சை என்பது பசுமையை குறிக்கும். எனவே, தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் இருப்பதால்  அதை குறிக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் வகையில் நாங்கள் பச்சைக் கொடியை காட்டுவோம் என அவர் கூறியிருப்பார்’ என ஜெயக்குமார் புது விளக்கம் கொடுத்தார். 
 
இதையடுத்து, அமைச்சர் நன்றாக முட்டுக் கொடுக்கிறார் என சமூக வலைத்தளங்களில் மீண்டும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்