உச்சகட்டத்தை அடையும் போராட்டம் - 6 மாணவர்கள் தற்கொலை முயற்சி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (11:31 IST)
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.


 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை அலங்காநல்லுர், அவனியாபுரம், பாலமேடு என தொடங்கிய இந்த போராட்டம் தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்று வருகின்றனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று, நாமக்கல் அருகே மின் கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் அதிலிருந்து குதித்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய 6 மாணவர்கள் அங்கிருந்து குதிக்கப்போவதாக கூறினர். தகவலறிந்த காவல் துறையினரும் அந்த மாணவர்களை செல்போன் டவரில் இருந்து இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
 
அடுத்த கட்டுரையில்