தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இளைஞர்கள் மாணவர்களின் போராட்டத்தால் அரசு இறங்கி வந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் பேச தமிழக முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளார்.
சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமாக அற வழியில் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என கூறியுள்ளனர்.
மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் இங்கு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து போராட்டக்களத்தில் அமைச்சர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் இதுகுறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்த டெல்லி செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
அதன்படி முதல்வர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். முன்னதாக பிரதமரை சந்திக்கும் முன்னர் அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தங்கியிருந்ததையடுத்து அங்கு திரண்ட தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பன்னீர்செல்வம் அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.