சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்துள்ள நிலையில் இந்த சோதனை தற்போது நடந்து வருகிறது.
10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை ஜெயா தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. மேலும் ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வரும் விவேக் தொடர்புடைய மற்ற சில இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசியுள்ள நிலையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்தின் பேரில் நடந்து வருவதாக தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மேலும் இந்த சோதனையால் தாங்கள் அதிர்ச்சியடையவில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் தங்கள் வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கவில்லை என அதிகாரிகள் மட்டத்தில் இருந்து முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.