கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளது பல ஐடி நிறுவனங்கள். இதனால் ஊழியர்களின் பணி திறன் அதிகரித்துள்ளதாக பல ஐடி நிறுவனங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொழிலாளர் சட்டத்தின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கோரிக்கைகள் வைத்துள்ளன.
இந்நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் குறித்து தொழிலாளர் சட்டத்தில் என்ன மாற்றங்க செய்ய வேண்டும் என்பது குறித்து நாஸ்காம் அமைப்பு மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளது. அந்த கோரிக்கைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2025க்குள் தனது ஊழியர்களில் 75 சதவீதத்தினரை வொர்க் ஃப்ரம் ஹோமில் பணிபுரிய அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனமும் 25 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிய அனுமதிக்க இருப்பதாக கூறியுள்ளது.
இதனால் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கும் ஐடி நிறுவனங்களில் சில நூறு பேர் மட்டுமே பணிபுரிவார்கள் என்றும், இதனால் ஐடி நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறையும் என்பதாலும் பல நிறுவனங்கள் இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.