தமிழர்களின் மரபான மருத்துவமுறையை சித்த மருத்துவத்தில் சேர்க்க மத்திய அரசு முயற்சிப்பதாய் கவிஞர் குட்டி ரேவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆங்கில மருத்துவ முறையான அலோபதி மருத்துவமே பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்றவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக இருந்து வருகிறது. இவற்றை பயில்வதற்கு முறையான கல்வி முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆயுர்வேத மருத்துவ அட்டவணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் மரபான சித்த மருத்துவத்தின் நூல்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சித்த வைத்தியரும், கவிஞருமான குட்டி ரேவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் ”தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குறியது.
தமிழ் மருத்துவ ஏடுகளை களவாடும் வடக்கத்திய கும்பலின் சூழ்ச்சியை புரிந்துக் கொண்டு அதனை ஒன்றுப்பட்டு பாதுகாக்க வேண்டியதும், எதிர்வினையாற்ற வேண்டியதும் நமது கடமையாக செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதேசமயம் சித்த மருத்து மூல புத்தகங்களை ஆயுர்வேத அட்டவணையில் சேர்த்தது குறித்து 3 மாதங்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K