சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல்.. கலந்தாய்வு எப்போது?

Mahendran

திங்கள், 14 அக்டோபர் 2024 (12:08 IST)
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னையில் வரும் 17-ம் தேதி தொடங்க இருக்கிறது.
 
தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறு ஆகியவற்றில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
 
இந்த 5 அரசு கல்லூரிகளில் 330 இடங்கள் உள்ளன, இதில் 50 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செய்யப்பட்டுள்ளது, மற்ற 280 இடங்கள் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 30 தனியார் கல்லூரிகளில் 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் 65 சதவீதம் மாநில அரசு மற்றும் 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு கிடைக்கும்.
 
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அனைத்து ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மத்திய அரசு கலந்தாய்வு நடத்தும்.
 
சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஹச்எம்எஸ்) போன்ற பட்டப்படிப்புகளுக்கு 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,500 மாணவர்கள், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 1,450 மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,400 மாணவர்கள் என மொத்தம் 7,350 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
 
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதார துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களில் 4,340 பேர் உள்ளனர்.
 
 இந்நிலையில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில், அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் 7.5 சதவீத உள்நாட்டுப் பங்குக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுவான பிரிவுக்கு 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்