கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, நவீன டி-ஷர்ட் ஒன்றை திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-ஷர்ட் அணிந்தால், உடல் வெப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-ஷர்ட், செம்பருத்தி பூ, வெங்காய சருகு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை வைத்து பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இங்க் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-ஷர்டை அணிந்தால், உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை அடையும் போது டி-ஷர்டின் நிறம் மாறும்; வெப்பநிலை குறைந்த பிறகு, மீண்டும் பழைய நிறத்திற்கு மாறும். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல் வெப்பத்தின் அடிப்படையில் காய்ச்சல் இருப்பதை அறிய முடியும்.
மேலும், இந்த டி-ஷர்ட்டில் உள்ள தொழில்நுட்பம் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். இந்த டி-ஷர்ட், பின்லாந்தில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாகவும், பல வண்ணங்களில் இயற்கையான பிரிண்ட் மூலம் டீசர்ட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், டி-ஷர்ட் தயாரித்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.