எனக்குத் தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அவரது அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தனர். அதில் கிடைத்த வருமானத்தில் அந்த பெண்ணை பி.எச்.டி. முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தனர். தற்போது அந்த பெண் ஒரு கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்," என்று அவர் கூறினார்.
ஒருவேளை அந்தத் தூய்மைப் பணியாளர்களுக்குப்பணி நிரந்தரம் இல்லாமல் இருந்திருந்தால், இன்று பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளராகத்தான் இருந்திருப்பார் என்று சண்முகம் தெரிவித்தார். "ஆகவே, பணி நிரந்தரம், அதில் கிடைக்கும் வருமானம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து, உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதற்கும் அந்த குடும்பத்திற்கு உதவுகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.
"இந்த கருத்தை திருமாவளவன் மட்டுமல்ல, அதியமான் உட்பட சிலரும் தெரிவித்துள்ளனர். இது துளியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பரம்பரையாக அந்த பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்போது பணி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்படும். அதுதான் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நியாயமான நடவடிக்கை. ஆகவே, திருமாவளவன் உள்ளிட்டோர் கூறும் கருத்துக்கள் ஏற்புடையது அல்ல," என்று சண்முகம் மேலும் கூறினார்.