கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

வியாழன், 31 மே 2018 (09:45 IST)
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நாளை தனியார், அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் தினமே இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

 
 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மூன்றாவது வாரம்  முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த கோடை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.
 
ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும் போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.
 
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்