சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், மணிப்பூர் கலவரம் குறித்து பேசியதற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
விகடன் குழுமம் பதிப்பித்துள்ள அம்பேத்கர் குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினர்களாக தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “புத்தக வெளியீடு என நக்ஸல்வாதத்தை ஊக்கப்படுத்த பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா? தமிழ்நாட்டில் அம்பேத்கரை வைத்து நன்றாக வியாபாரம் செய்கிறார்கள். அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே கிடைக்கலையா? லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, நக்சல் குற்றவாளி ஆனந்த் டெல்டும்டே போன்றவர்களை அழைத்தது ஏன்?
திருமாவளவன் கட்டுப்பாட்டில் விசிக இல்லை. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயங்குவது ஏன்? தனது கட்சிக்கு நிதி அளிப்பவர் மீது கை வைக்க திருமா விரும்பவில்லை என்பதே காரணம்.
விஜய் இப்போதுதான் நடிகரில் இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ளார். அவருக்கு அரசியல் அடிப்படை புரிதல் தேவை. பொது அறிவை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர் பேசியதில் தவறில்லை. அவர் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் நானே அவரை அழைத்து சென்று கள நிலவரத்தை எடுத்துரைக்க தயார். மணிப்பூர் பற்றி விமர்சிக்கும் மற்றவர்களையும் கூட அழைத்து செல்ல தயார். அங்கு அமைதியை கொண்டு வர மத்திய அரசு அனைத்து வகையிலும் தீர்வுகளை கண்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K