அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துகள், தமிழக அரசியல் அரங்கில் பெரிதும் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
"(திமுகவின்) கூட்டணி கணக்குகளை வரும் தேர்தலில் மக்கள் மைனஸாக்கி விடுவார்கள்" என விஜய் கூறியதும், "2026 சட்டமன்ற தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்" என ஆதவ் அர்ஜூனா கூறியதும் திமுக தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.
விஜய், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கள் திமுகவுக்கு கூட்டணி தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வி இதையொட்டி எழுந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) அன்று, விகடன் பதிப்பகத்தால் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தகம், தவெக தலைவர் விஜய் தலைமையில் வெளியிடப்பட்டது.
இதில், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே. சந்துரு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், 'மக்களுக்கு அடிப்படையான சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல், கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என முழக்கமிடுவதாக' திமுக அரசை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
'மன்னராட்சி' முதல் 'கூட்டணி கணக்கு' வரை
மேலும், "சுயநலத்துடன் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்" என்றும் அவர் கூறினார்.
தவிர, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு தொல். திருமாவளவனுக்கு உள்ள கூட்டணி அழுத்தத்தை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக விஜய் தெரிவித்தார்.
அதேசமயம், இந்நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும் அப்புத்தகத்தின் இணை பதிப்பகமான 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா, "2026 தேர்தலில், மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது," என பேசினார்.
திமுகவுக்கு சிக்கலா?
"மாநாட்டிலேயே திமுக தான் எதிரி என்பதை உறுதிப்படுத்திவிட்டார் விஜய். அதை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இன்னும் கூர்மைப்படுத்தியுள்ளார். ஆனால், விஜயோ, ஆதவ் அர்ஜூனாவோ பேசியது, திமுகவுக்கு நெருக்கடி என நான் சொல்ல மாட்டேன். நெருக்கடி திருமாவளவனுக்குதான். திமுகவை காட்டமாக விமர்சிக்கும் ஒருவருடன் விசிக நிர்வாகி ஒருவர் மேடையை பகிர்ந்துகொண்டது, கூட்டணி தர்மத்தை மீறும் செயல்," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.
விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கிய போதே, அதற்கான வியூகத்தை திமுக வகுக்கத் தொடங்கியிருக்கும் என்றும், என்ன மாதிரியான வியூகங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துக்கள் குறித்து திருமாவளவன் எப்படி பதில் கூறினாலும், ஆபத்து திருமாவளவனுக்குதான் என்கிறார் லட்சுமணன்.
"இதனால், திருமாவளவனின் தலைமை குறித்த கேள்வி எழும். கட்சிக்குள்ளேயே பிடி தளரும்" என்கிறார் அவர்.
இதே கருத்தை பிரதிபலிக்கிறார், மற்றொரு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"திமுகவுக்கு எந்த சிக்கலும் இல்லை. விசிக கூட்டணியில் உள்ள முக்கிய நிர்வாகி (ஆதவ் அர்ஜூனா), ஆட்சியை விமர்சிப்பது கூட்டணி தர்மத்திற்கே எதிரானது. ஒன்று, கூட்டணி தர்மத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்க வேண்டும். அதைவிடுத்து, திமுகவை விமர்சிக்கிறீர்கள் என்றால், விசிகவை விட்டு வெளியே வந்த பின்னர் விமர்சிக்கலாம்" என்கிறார் ப்ரியன்.
"இதே கருத்துகளுடன் ஆதவ் அர்ஜூனா விசிகவில் தொடர்ந்தால் திருமாவளவனுக்கு தான் சங்கடம் ஏற்படும். திமுக மேற்கொண்டு இதை ரசிக்காது" என்கிறார் ப்ரியன்.
உதயநிதியின் பதில்
ஆதவ் அர்ஜூனாவின் கருத்தை திமுக ரசிக்கவில்லை என்பது, சனிக்கிழமை தமிழ்நாட்டின் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறிய கருத்தில் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
புத்தக நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா பேசியவை குறித்து வேலூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி, தான் "சினிமா செய்திகளை" பார்ப்பதில்லை என பதிலளித்தார்.
மேலும், ஆதவ் அர்ஜூனாவின் "மன்னராட்சி" தொடர்பான கேள்விக்கு "இது மக்களாட்சி, மக்கள்தான் முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இது அவருக்குத் தெரியாதா?" என கேள்வியெழுப்பினார்.
கூட்டணியை உடைக்கும் நோக்கமா?
"திமுக - விசிக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் விஜய் - ஆதவின் நோக்கம். ஆனால் அது நடக்கவில்லை. தான் ஏன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என காரணம் கூறி திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையிலேயே அது தெளிவாக தெரிந்துவிட்டது" என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
ஆனால், தங்களுக்குக் கூட்டணியை உடைக்கும் நோக்கம் இல்லை என்கிறார், தவெகவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கூட்டணியை உடைப்பதற்காக கட்சி ஆரம்பிக்கவில்லை, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் அடிப்படையில்தான் தவெக தலைவர் அந்த கருத்தைக் கூறியதாக பார்க்க வேண்டும். நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். நாங்கள் ஏன் கூட்டணியில் கல்லெறிய வேண்டும்?" என தெரிவித்தார்.
கூட்டணியை மட்டுமே நம்பி திமுக இருப்பதாக விஜய் பேசியிருப்பது எந்தளவுக்கு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கிறது?
"இன்றைக்கு இருக்கும் சூழலில் திமுகவிலிருந்து எந்த கட்சியும் வெளியே போவது திமுகவுக்கு நல்லதல்ல. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஏற்கனவே தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்தவர்கள். அதனால், எந்தவொரு சிறு கட்சி கூட வெளியே செல்வதை திமுக விரும்பாது." என தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடி ஏற்படுமா?
இது தேர்தல் சமயத்தில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், "தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் தொகுதிப் பங்கீடு அளவுக்குப் பேச முடியாது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இம்மாதிரியான பேச்சுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதைத்தாண்டி இதில் வேறொன்றும் கிடையாது. 2026 ஜனவரி மாதம்தான் இதைப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்பு இதை பேசுவதில் அர்த்தமே கிடையாது" என பதிலளித்தார்.
''கூட்டணியிலோ, தொகுதிப் பங்கீட்டிலோ எவ்வித சிக்கலும் நேராது. விஜயோ, ஆதவ் அர்ஜூனாவோ பேசினாலும், திருமாவளவனுக்கு நிதர்சனம் தெரியாதா? இன்றைக்கு இருக்கும் தலைவர்களில் ஸ்டாலினுக்குப் பிறகு வலுவான தலைவர் திருமாவளவன்தான். இதற்கெல்லாம் திருமாவளவன் மயங்கமாட்டார்" என்றார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன்.
திமுக கூட்டணிக் கட்சிகளை நம்பிதான் உள்ளதாக விஜய் கூறியது குறித்துப் பதிலளித்த அவர், ''தமிழ்நாட்டிலோ இந்திய அளவிலோ பெரும்பாலும் எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சியைப் பிடித்தது கிடையாது. ஒத்த கருத்துடையோர் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்கின்றனர்" என்றார்.
இதுதொடர்பாக பேச விசிகவின் பல்வேறு நிர்வாகிகளை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவர்களின் கருத்துகளை பெற முடியவில்லை.
இந்த பேச்சுக்களைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா விசிகவிலிருந்து நீக்கப்படுவாரா, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "(ஆதவ் அர்ஜூனா குறித்து) கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். அவர் கூட்டணி நலன், கட்சி நலனுக்கு எதிராக பேசியுள்ளார். விசிகவுக்கு இது ஆரோக்கியமானது இல்லை என்பதால்தான் கூடி பேசவுள்ளோம்" என்றார்.
அதேசமயம், பிபிசி தமிழில் வெளியான மற்றொரு கட்டுரையில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, "கட்சித் தலைமையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தால் அதற்கு பதில் அளிப்பேன். இதுகுறித்து விரைவில் விரிவாகப் பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு