இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் அதிகரிப்பது பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் அது தொடர்பான மருந்துகள் சில மாதங்களிலேயே 100 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் 1990கள் முதலாகவே அதிகரித்த துரித உணவு பழக்கத்தால் தற்போது அங்கு உடல் பருமன் அதிகரித்தல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்போது அவ்வாறான தாக்கத்தை இந்தியாவும் உணரத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிலும் கடந்த சில தசாப்தங்களில் மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் வெகுவாக மாறியுள்ளது. முன்பெல்லாம் வாரத்தில் ஒருமுறை வெளியே சாப்பிடும் நிலை மாறி தற்போது பெருநகரங்களில் நினைத்த நேரம் ஆன்லைனில் துரித உணவுகள், எடை அதிகரிக்க செய்யும் உணவுகளை மக்கள் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
தி லான்செட் மருத்துவ இதழ் கடந்த 2022ம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இளைஞர்களில் சுமார் 1.25 கோடி பேர் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. நடுத்தர வயதினர், முதியவர்களுக்கு சர்க்கரை காரணமாக உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், உலக அளவில் அதிக சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உடல் எடை குறைப்பிற்காக தனியார் மருந்து நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்திய மருந்து 3 மாதங்களில் ரூ.100 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஆண்டு உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இப்படியான மருந்துகளின் விற்பனையும் அமோகமாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. நமது உணவு தேர்வு, ஆரோக்கியமான வாழ்க்கை சூழல்களுக்கான முக்கியத்துவம் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தற்போது சாதாரணமாக சுகர், பிபி மருந்துகளை எடுப்பது போல இந்த எடை குறைப்பு மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
Edit by Prasanth.K