தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் குறித்து பெருமிதமாக பேசினார்.
அவர் கூறியது: "இந்த தாக்குதல் இந்திய மக்களின் மனதை நிமிர வைத்தது. காஷ்மீர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா இப்போது சாந்தியடையும். பிரதமர் மோடி 140 கோடி மக்களின் குரல், அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்டது. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க முடியாத நிலை ஏற்பட்டதுதான் இதற்குக் காரணம்."
மேலும், "போர் ஒத்திகை நடந்ததை கேட்டு, அதில் கலந்துக்கொள்ள முடியாதது வருத்தமாக உள்ளது. வாய்ப்பு வந்தால் நிச்சயம் போருக்குச் செல்வேன். இது வெறும் பேச்சல்ல," என்றார்.
பாஜகவுக்கு திருமாவளவனை கூட்டணியில் சேர்க்க அழைத்தீர்களா என்ற கேள்விக்கு, "அவர் என் நெருங்கிய நண்பர், ஆனால் இதுவரை கூட்டணி பற்றி பேசவில்லை," என பதிலளித்தார்.
"தேசப்பற்று என்பது கட்சியை பார்க்காது. பாஜக, திமுக, அதிமுக எது இருந்தாலும் தேச உணர்வு முதன்மையாக இருக்க வேண்டும். 2026-ல் 'வெற்றிவேல் வீரவேல்' என்ற நடவடிக்கையை தொடங்கப்போறோம்," என்றும் கூறினார்.