இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் வலிமையால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் அணுகல் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் சி.எஸ். ஷெட்டி குளோபல் ஃபின்டெக் திருவிழாவில் பேசினார்.
அவர் கூறுகையில், "இன்று, ரூ. 5 கோடி வரையிலான கடனை ஒரு வாடிக்கையாளருக்கு 25 முதல் 26 நிமிடங்களுக்குள் அனுமதி வழங்க முடியும். இது இந்தியாவின் டிஜிட்டல் தளத்தால் சாத்தியமானது" என்றார்.
எஸ்.பி.ஐ. வங்கியானது, யுபிஐ, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி போன்ற விரிவான தரவுகளை பயன்படுத்தி விரைவான கடன் முடிவுகளை உறுதி செய்கிறது.
15 கோடி ஜன் தன் கணக்குகளில் 99.5 சதவீதம் நிதியளிக்கப்பட்டுள்ளதாகவும், சராசரி இருப்பு ரூ. 4,000 ஆக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், தினமும் சுமார் 35 லட்சம் பரிவர்த்தனைகள் நடப்பதாகவும், கணக்கு வைத்திருப்பவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூஜ்ஜிய இருப்புடன் தொடங்கிய அடிப்படை சேமிப்புக் கணக்குகள், படிப்படியாக சிறிய வணிக கணக்குகளாக மாறுவது, வங்கிச் சேவைகள் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருவதை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.