முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக முழுவதும் சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசுகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதமாகவே அவர்களின் செயல்பாடுகளும் உள்ளன.
சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்ட போது அவரது அக்கா மகன் தினகரனை அவசர அவசரமாக கட்சியில் சேர்த்து துணை பொதுச்செயலாளர் பதவியும் அளித்து விட்டு சென்றார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அந்த கட்சியில் அதிகமாகவே உள்ளது என தொண்டர்களும் குமுறுகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர் தான் அதிமுகவை பின்னால் இருந்து இயக்குவேன் என்பதை தெரிவிக்கும் விதமாக அதிமுகவில் எந்தப் பதவிக்கும் நான் வர மாட்டேன். ஆனால், செய்ய வேண்டியதைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பேன். பதவிக்கு வராமலேயே அதிமுகவை பாதுகாப்பேன் என்றார்.
இதற்கு முன்னரும் நடராஜன் பொங்கல் விழாவின் போது தமிழகத்தில் நாங்கள் குடும்ப ஆட்சியை நடத்துவோம் என பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து பதவிக்கு வராமல் அதிமுகவை பாதுகப்பேன் என அவர் கூறியிருப்பது தான் பின்னல் இருந்து அதிமுகவை இயக்குவேன் என்பதையே உணர்த்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.