’விரைவில் நடந்து வந்து பதில் சொல்வேன்’ - ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பதில்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (05:20 IST)
எழுந்து, அமர்ந்துதான் இந்த அறிக்கையை எழுதுகிறேன். விரைவில் நடந்து வந்து பதில் சொல்வேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடிப்படியில் தவறி விழுந்த கமலஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிக்சை செய்யப்பட்டது.
 
இந்நிலையில், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்பால் எப்போதும், எந்த நிலையிலும் என்மீது அன்பு காட்டும் ரசிகர்களுக்கு அன்பு வணக்கம். சிறிய விபத்தா? பெரிய விபத்தா? ஆபத்தா? என்று பல கேள்விகளுடன் பலர் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.
 
இவர்களின் அன்பை பார்த்து நான் வியப்படைவதை தவிர வேறென்ன செய்ய முடியும். இத்தனை அன்புக்கும் பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை. அன்பும் என் கலையும்தான். அதை செய்ய நான் ஏற்ற பாத்திரங்களும்தான்.
 
எனக்கு நடந்தது நல்லதோ, கெட்டதோ அதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. வெற்றிகளும், விபத்துகளும் என் கதையில் விசித்திரமல்ல. சில இடர்பாடுகளை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துக்களை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இந்த விபத்தே சான்று.
 
ஆயிரம் வேலைகள், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கும்போது இந்த விபத்து நடந்திருக்க வேண்டாமே. ஆனால் நல்ல மருத்துவர்கள், அவர்களது உதவியாளர்கள், என் சிறு குடும்பமும் உடன் இருந்து கவனித்துக் கொண்டதில் நான் குறையின்றி இருக்கிறேன்.
 
எப்படி இருக்கிறீர்கள்? எப்போது பார்க்கலாம் என கேள்வி கேட்கும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பதில் சொல்ல விரைவில் நலம் பெற்றுத் திரும்புவேன். எழுந்து, அமர்ந்துதான் இந்த அறிக்கையை எழுதுகிறேன். விரைவில் நடந்து வந்து பதில் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்