நான் ஓடி ஒளிபவன் அல்ல.! பொறுப்புடன் பதிலளிப்பவன்..! முதல்வர் ஸ்டாலின்...!!

Senthil Velan
வெள்ளி, 21 ஜூன் 2024 (13:35 IST)
கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளை செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும்,  கூடுதலாக 57 அரசு மருத்துவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் உயிர்காக்கும் மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட 164 நோயாளிகளில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவரை கைது செய்து,  200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
 
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாளில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் தெரிவித்தார். அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மெத்தனால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் ஆலைகளை தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும் கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ: கள்ளக்குறிச்சி விவகாரம்.! சட்டசபையில் கடும் அமளி..! பாமக - பாஜக வெளிநடப்பு.!!
 
உள்துறையை கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் இந்த பிரச்னையில் இருந்து ஓடி ஒளிபவன் அல்ல, பொறுப்புடன் பதிலளிப்பவன் என்று முதல்வர் கூறினார்.  அதனால் தான் எடுத்த நடவடிக்கையை பட்டியலிட்டு, குற்றவாளிகளை கைது செய்த பிறகே பதிலளிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்