ராம்குமார் விவகாரம்-சுதிர் குப்தா கையில்: இவர் யார் தெரியுமா?

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (17:18 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த 18-ஆம் தேதி சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளான் என ராம்குமார் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.


 
 
இதனால் கடந்த 18-ஆம் தேதி இறந்த ராம்குமாரின் உடல் இன்று தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தனியார் மருத்துவரும் இடம்பெற வேண்டும் என அவரது தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
ஆனால் அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் எயிம்ஸ் மருத்துவர் ஒருவரை இதில் நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.
 
அதன்பேரில், எயிம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா இன்று ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்த சுதிர் குப்தா பல முக்கியமான வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்து பல அதிர்ச்சி ரிப்போட்டை அளித்து வழக்கையே விறு விறுப்பாக்கியவர்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்த புஷ்கர் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரை பிரேத பரிசோதனை செய்தவர் சுதிர் குப்தா தான். அவரது கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருப்பதாக அஞ்சாமல் அறிக்கை கொடுத்தவர் இவர்.
 
இவரது அந்த அறிக்கைக்கு பின்னரே அந்த வழக்கு விறுவிறுப்பானது. அதன் பின்னர் அவர் வகித்த எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
 
தர்மபுரி இளவரசன் பிரேத பரிசோதனையில் சர்ச்சை எழுந்தபோது உயர் நீதிமன்றம் நியமித்த மருத்துவர் குழுவிலும் சுதிர் குப்தா இடம்பெற்றார். அதேபோல் சமீபத்தில் டெல்லி எயிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துவந்த திருப்பூர் சரவணன் மர்மமான முறையில் இறந்த வழக்கிலும் சுதிர் குப்தா பிரேத பரிசோதனை செய்தார்.
 
சரவணன் உடலில் யாரோ விஷ ஊசி செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது என இவர் கூறிய அந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தற்போது ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவில் இடம்பெற்றுள்ள சுதிர் குப்தா அளிக்க இருக்கும் அந்த அறிக்கை தான் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.

இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்