திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் தரிசனத்திற்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வரும் நிலையில், பள்ளி விடுமுறை, ஆண்டு இறுதி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை அன்றே பக்தர்கள் பலர் குவிந்ததால் இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை என்பதால் விடியற்காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். திருப்பதியில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில், குளிரும் வாட்டி வருகிறது. ஆனால் பக்தர்கள் அதையும் தாண்டி மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், 24,503 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் வசூல் ரூ.4.06 கோடியாக வசூலாகியுள்ளது.
Edit by Prasanth.K