முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (23:28 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது இயல்பான முறையிலேயே சுவாசித்து வருவதாகவும் வெறும் 15 நிமிடம் மட்டுமே செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் நேற்று மீண்டும் சென்னை வந்தனர். பின்னர், அப்பல்லோ மருத்துவர்கள் குழுவினருடன் ஆலோசித்த பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா முழுவதுமாக உடல்நிலை தேறிவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ‘‘முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதய, சுவாசயியல் நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்