ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை ஏற்படுத்திய பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரும் தகுதி திமுகவுக்கு உண்டா என்பது தான் எனது தாழ்மையான வினா என்று பாமக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை ஏற்படுத்திய பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரியத்தை கலைத்து விட்டு தமிழகத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளித்து புதிய வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தி இருக்கிறார். அதை சொல்லும் தகுதி திமுகவுக்கு உண்டா என்பது தான் எனது தாழ்மையான வினா. கடந்த 1999 முதல் 2004 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்த திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் பீட்டாவை தடை செய்யும்படி பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதையும் தமிழக மக்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு சிக்கல் இப்போது தான் வந்தது என்று கூறி இந்த பிரச்சினையிலிருந்து ஸ்டாலின் விலகிவிட முடியாது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2004-ம் ஆண்டிலிருந்தே பீட்டா அமைப்பும், இந்திய விலங்குகள் நலவாரியமும் வலியுறுத்தத் தொடங்கின. அதன்விளைவாகத் தான் 2008-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2004-ம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கையில் வைத்திருந்த திமுக, இப்போது கூறும் யோசனைகளை அப்போதே எடுத்திருந்தால் ஜல்லிக்கட்டு தடையின்றி நீடித்திருக்கும்.
பீட்டாவும், இந்திய விலங்குகள் நல வாரியமும் தமிழர்களுக்கு எதிரானவை. காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உடனடியாக நடக்க மத்திய அரசு வகை செய்ய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.