தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பூதாகரம் ஆகியது. எனவே, லஞ்ச ஒழுப்புத்துறை இதை விசாரித்து வந்தது. ஆனால், இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் இந்த வழக்கை தொடர்ந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என தகவல் வெளியானதையடுத்து தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கூறியுள்ளது.