சந்தன மரங்களுடன் ஊடுபயிராக கொய்யா, வேர்கடலை - அசத்தும் திருத்தணி விவசாயி!

ஞாயிறு, 28 மே 2023 (12:08 IST)
“உற்பத்தி செலவு மற்றும் வேலை ஆட்கள் பற்றாகுறையால் சிரமப்படும் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவதே சிறந்த தீர்வு” என அடித்து சொல்கிறார் திருத்தணி விவசாயி செல்லபதி.
 



திருத்தணி வட்டத்தில் உள்ள சிங்கராஜபுரம் என்னும் கிராமத்தில் 6 ஏக்கரில் மரம் சார்ந்த விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்டு வரும் இவர் ஊடுபயிர்கள் மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார்.

“நாங்க பாரம்பரியமா தலைமுறை தலைமுறையா விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். வழக்கமா, கரும்பும் நெல்லும் போடுவோம். ஆனா, இப்போ அந்த ரெண்டு பயிரும் பண்ணனும்னா உரங்களுக்கு அதிகம் செலவு ஆகுது. வேலைக்கு ஆட்களும் கிடைக்கமாட்டிகிறாங்க. அதுனால வித்தியாசமா என்ன பண்ணலாம்னு யோசிப்பதான் சந்தன மரம் வளர்க்கலாம்னு தோணுச்சு.

மரங்கள்லயே விலை உயர்ந்த மரம் சந்தன மரம். இப்போ இருக்குற மார்க்கெட் ரேட் படி ஒரு கிலோ ரூ.10 ஆயிரத்தில இருந்து ரூ.12 ஆயிரம் வரை போகுதுனு சொல்றாங்க. டிம்பர் மரங்கள்ல இருந்து கிடைக்கிற அளவுக்கு மொத்த வருமானம் வேற எந்த பயிர்லயும் கிடைக்காது. அதுனால தான் நான் 6 ஏக்கர்ல 700 சந்தன மரம், 200 மகோகனி, 100 வேங்கை மரம் வச்சுருக்கேன். இது மட்டுமில்லாம, வரப்ப சுத்தி 500 தேக்கு மரங்கள் வச்சுருக்கேன்.

எல்லா மரக்கண்ணுங்களயும் ஈஷா நர்சரியில இருந்து எடுத்து நட்டுருக்கேன். ஒரு மரக்கண்ணு வெறும் 3 ரூபாய்க்கு ரொம்ப குறைஞ்ச விலையில கொடுக்கிறாங்க. அதுமட்டுமில்லாம மரங்கள் எவ்வளவு இடைவெளியில எப்படி நடணும்னு அவங்க தான் ஆலோசன கொடுத்தாங்க.

பொதுவா சந்தன மரம் மட்டும் தனியா வைக்க முடியாது. அதுக்கு தேவையான நைட்ரஜன கொடுக்கிறதுக்கு பக்கத்துல இன்னொரு துணை மரம் வைக்கணும். கொய்யா மரம் வச்ச அதுல இருந்து தனி வருமானமும் பார்க்கலாம்னு காவேரி கூக்குரல் இயக்கத்துல இருந்து ஆலோசன சொன்னாங்க. அதுனால சந்தன மரத்துக்கு இடையில 1000 கொய்யா மரங்கள் நட்டுருக்கேன். ஒரு மரத்துல இருந்து ஒரு கிலோ பழம் கிடைச்சாலும் மொத்தம் ஆயிரம் கிலோ கிடைக்கும். வருசத்துக்கு இரண்டு தடவை அறுவடை பண்ணலாம். கிலோ 40 ரூபாய்க்கு போனாலும் கொய்யா மரத்துல இருந்து மட்டும் ரூ.80,000 வருமானம் கிடைக்கும்” என்றார்.

கொய்யாவுடன் சேர்த்து வேர்கடலையையும் ஊடுபயிராக நட்டுள்ள செல்லபதி அறுவடை செய்யும் வேர்கடலைகளை மக்களிடம் நேரடியாக விற்காமல் விவசாயிகளிடம் விதைக்காக என கூடுதல் விலையில் விற்கிறார். இதனால், மற்ற விவசாயிகள் ஒரு மூட்டை வேர்கடலையை ரூ.2000 முதல் ரூ.2,500 வரை விற்றால் இவர் ரூ.3,000 முதல் ரூ.3,400 வரை விலை வைத்து விற்கிறார். 6 ஏக்கரில் 70 முதல் 80 மூட்டை எடுக்கும் இவர் வேர்கடலை மூலம் மட்டும் ஆண்டிற்கு ரூ.2,10,000 முதல் ரூ.2,50,000 வரை வருமானம் பார்க்கிறார். செலவுகள் எல்லாம் போக ஊடுபயிர் மூலம் போதிய லாபமும் ஈட்டி வருகிறார்.

“மரங்களோட சேர்த்து ஊடுபயிர் பண்றனால களை செடிகளோட தொந்தரவு இல்ல. அதுமட்டுமில்லாம, மரங்கள்ல இருந்து விழுகிற இலை தளைகள்னால, ஊடுபயிர் நல்லா வளரும். ஊடுபயிர் இருக்குறனால, மரத்துக்கு தேவையான சத்தும் கிடைக்கும். இந்த முறையில் 7ல இருந்து 9 வருசம் வரைக்கும் ஊடுபயிர் செய்யலாம்னு சொல்றாங்க. அதுக்கப்பறம் 15, 20 வருசத்துக்கு பிறகு டிம்பர் மரங்கள வெட்டி மொத்தமா வருமானம் பார்க்கலாம்” என கூறினார்

மரம் சார்ந்த விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்