‘மரங்கள் தான் சிறந்த முதலீடு’ - ஓய்வுக்கு பின் மரம் வளர்க்கும் வனவர்

சனி, 27 மே 2023 (20:35 IST)
தண்ணீர் பற்றாகுறை, வேலை ஆட்கள் பற்றாகுறை, லாபமின்மை போன்ற பல காரணங்களால் பலரும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சடையாண்டி பணி ஓய்வுக்கு பிறகு விவசாயத்தில் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்துள்ளார்.
 

இந்த நம்பிக்கை எங்கு இருந்து வந்தது என கேட்டபோது, “நான் வனத் துறையில வேலைப் பார்த்தனால மரங்களோட மதிப்பு எவ்வளவுனு எனக்கு நல்லாவே தெரியும். மர வியாபாரிங்க தேக்கு மரங்கள லட்சக்கணக்குல பணம் கொடுத்து வாங்குவாங்க. அதுல ஒரு வியாபாரி எனக்கு நல்ல பழக்கம். அவர் ‘நீங்க வரப்போரம் மட்டும் 100 தேக்கு மரம் வையுங்க. 30, 40 வருசம் கழிச்சு மொத்தமா ஒரு பெரிய தொகை கிடைக்கும்னு சொன்னாரு.

அதுமட்டுமில்ல, என்னோட பக்கத்து தோட்டத்துல வரப்புல 3 தேக்கு மரம் இருக்கு. 20 வருசத்துல நல்லா பிரமாண்டமா வளர்ந்து நிக்குது. வியாபாரிங்க அத பார்த்துட்டு 50 ஆயிரத்துக்கு கேட்குறாங்க. ஆனா, தோட்டத்துக்காரரு அதைவிட அதிகம் எதிர்பார்க்குறா. இந்த இரண்டு விஷயங்கள்னால மரம் வளர்த்தா கட்டாயம் லாபம் கிடைக்கும்னு எனக்கு தெரிஞ்சுது.

இதுக்கு இடையில 2017-ல ரிடையர்ட் ஆனேன். வீட்டுல சும்மா உக்கார்ந்து இருந்தா உடம்புக்கு ஆகாது, ஆரோக்கியமா இருக்குறதுக்கு விவசாயம் பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். அதனால 3 ஏக்கர் நிலம் வாங்கி, நெல், கரும்பு விவசாயம் பண்ணேன். அது எதுவும் கட்டுப்படி ஆகல. கூலி ஆட்கள் வரமாட்றாங்க. நெல்லு அறுக்குறதுக்கு கஷ்டமா இருந்துச்சு.


 
அதுனால 2021-ல ஒரு ஏக்கர் 20 செண்டுல டிம்பர் மரக்கண்ணு வைக்க ஆரம்பிச்சேன். தேக்கு, ஈட்டி, நீர் மருது, மகாகனி, செம்மரம்னு மொத்தம் 405 மரங்கள் இப்போ என் தோட்டத்துல இருக்கு. மிச்சமுள்ள நிலத்துல 125 பப்பாளி மரம், 150 செடி முருங்கை இருக்கு. அதோட, பச்சை மிளகாய், பாகற் காய், கத்திரிக்காய் போன்ற காய்கறி பயிர்களும் சேர்த்து நட்டுருக்கேன். நிறைய பயிர்கள கலந்து நட்டுருக்கனால சுலபமா விக்கவும் முடியுது. செலவு போக நல்ல லாபமும் வருது. அடுத்த படியா, இன்னும் ஒரு 600 டிம்பர் மரங்கள நடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றார்.

அனைத்து மரக்கன்றுகளையும் அருகில் இருக்கும் ஈஷா நர்சரியில் இருந்து ரூ.3 என்ற குறைந்த விலையில் வாங்கி வந்து நடுகிறார். மரங்களை நடுவதற்கான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் அவர்களின் தோட்டத்திற்கே நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

மரங்களை வளர்ப்பதால் அதில் இருந்து பொருளாதார பலன்கள் கிடைப்பதோடு மட்டுமின்றி அந்த நிலமும் சுற்றுச்சூழலுடன் பாதுகாக்கப்படும் என கூறும் சடையாண்டி “நாம நிலத்துல மரங்கள் நடமா சும்மா போட்டு இருந்தாலோ, சாதாரணமா பயிர் பண்ணாலோ நம்மளோட பையங்க அத விக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதேசமயம், நிலத்துல மரம் நல்லா வளர்ந்து இருந்தா அதுல இருந்து எதிர்காலத்துல மொத்தமா பணம் வருங்கிற எண்ணத்துல நிலத்த விக்கமாட்டங்க. இதனால, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், எதிர்காலத்துல பேரன் பேத்திகளுக்கு சொத்தாவும் மாறும்” என கூறினார்.

மரம் சார்ந்த விவசாயம் தொடர்பாக இலவச ஆலோசனைகள் பெற காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்