குரூப் 4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்- டிடிவி. தினகரன்
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:16 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சீர்திருத்தம் தேவை எனவும் குரூப் 4 காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவை நனவாக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிப்பதுமுதல் விடைத்தாள்களை ஸ்கேன்(Scan) செய்வது வரை பல்வேறு செயல்பாடுகளை அவுட் சோர்சிங்(Outsourcing) முறையில் செய்வதால் வினாத்தாள் வெளியாவதும், பயிற்சி மையங்கள் தொடர்பான
சந்தேகங்களும் தேர்வர்கள் மத்தியில் எழுகிறது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. அவற்றை தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக் கிடைத்திட வெளிப்படையான, நேர்மையான தேர்வுமுறை நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 2022ஆம் ஆண்டு 7301 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
கொரோனாவின் நிறுவனங்களில் தாக்கத்தால் தனியார் வேலையிழந்தவர்கள், புதிதாக கல்லூரி முடித்தவர்கள், பெண்கள் என 18 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு வேலையை எதிர்பார்த்து தேர்வு எழுதினர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதும் அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் செய்திகள் வந்தன. அதை சரிக்கட்டுவதற்காக கூடுதலாக 3000 காலிப்பணியிடங்களை மட்டும் சேர்த்து 10,117 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தேர்வாணையம் அறிவித்தது. தோராயமாக 30,000 பணியிடங்களாவது நிரப்பப்படும் என்று எதிர்பார்த்திருந்த தேர்வர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டித்தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று கூறும் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர், டி.என்.பி.எஸ்.சி.க்கு தலைவர் நியமிப்பது பற்றியோ, துறையை சீரமைக்கவோ எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்க முன்வராதது ஏன்?,
சமீபத்தில் கூட குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளில் வினாத்தாள் குளறுபடிகள் ஏற்பட்டதை நான் இந்த அரசுக்கு நினைவுபடுத்துகிறேன்.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது ஏன்? தி.மு.க அரசு வழக்கம் போல தனது வாக்குறுதியை மறந்து விட்டு, லட்சகணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளுக்கு எதிராக துரோகம் இழைக்கிறது. விடியா அரசாகவே தொடர்ந்து திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்..