பொதுமக்களிடம் சில குற்ற பிண்ணனி கொண்டவர்கள் செயின் பறிப்பு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்வதும் வாடிக்கையான சம்பவமாக உள்ளது. ஆனால் கோவையில் காவல் அதிகாரி ஒருவரே பார்ட் டைமாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி 2 பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலரான சபரிகிரிதான் செயின் பறிப்பில் ஈடுபட்டது என தெரிய வந்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் செட்டிப்பாளையம் பகுதியிலும் சபரிகிரி பலமுறை செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்வதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மக்களை காக்க வேண்டிய காவல் அதிகாரியே பார்ட் டைம் கொள்ளையனாக செயல்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.