முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தபடி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாஞ்சோலையில் பல தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளர்களாக தங்கி பலர் பணிபுரிந்து வந்தனர். தற்போது மாஞ்சோலை எஸ்டேட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்த நிலையில் அங்கு தேயிலை சாகுபடியை நிறுத்தி வனத்துறை வசம் கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியது.
ஆனால் அவர்களுக்கு விலையில்லா வீடு, சொந்த தொழில் தொடங்க கடன் வசதி உள்ளிட்டவற்றை அரசு ஏற்படுத்தி தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக திருநெல்வேலியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 20 குடியிருப்புகள் மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.11.54 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு பயனாளிகள் தொகை ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அந்த தொகையை அரசே செலுத்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K