அரசு நடத்தும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று 19வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 50,000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள 1,600 மையங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக இறக்கும் நிலை உள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 65 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். எனவே அரசு நடத்தும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.