தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத்திருப்பதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் முக்கியமான பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள் மக்களின் தேவைக்காக 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக கால அவகாசம் ஜூன் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வணிகர்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு 24 மணி நேரம் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் நலன் கருதி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க 3 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K