முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை வேட்டி கட்டிய ஜெயலலிதாவாக நினைத்துக்கொண்டு செயல்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விதியின் 110-இன் கீழ் அமைச்சர்கள் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை எல்லாம் தானே அறிவித்து தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வார் என குற்றம் சாட்டிய ராமதாஸ் இதையே தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிவித்துள்ள அறிக்கையில், இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தம்மை வேட்டி கட்டிய ஜெயலலிதாவை நினைத்துக் கொண்டு, அதே அடிமைக் கலாச்சாரத்தை தொடர்ந்து வருகிறார் என சாடியுள்ளார் ராமதாஸ்.
மேலும், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவரது வழியில் அடிமைக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது. சட்டப்பேரவையில் அறிவார்ந்த விவாதங்கள் நடப்பதையும், அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளை அவர்களே வெளியிடுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.