டிடிவி தினகரன் மீது தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்ததாக கூறி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட உள்ளதாக பரவலாக தகவல்கள் வந்தவாறு உள்ளன.
தேச துரோக வழக்கில் என்னை கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அப்படி என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் அதனை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார் தினகரன்.
இதற்காக எந்த முன் ஜாமீனும் எடுக்காத தினகரன் தான் கைது செய்யப்பட்டால் அது தனக்கு சாதகமாகத்தான் முடியும், எடப்பாடி பழனிச்சாமியின் பழவாங்கும் நடவடிக்கை என மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என தனது ஆதரவாளர்களிடம் தினகரன் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கையை தனது அரசியல் பயணத்துக்கு அஸ்திவாரமாக தினகரன் திட்டமிட்டுள்ள நிலையில் இதனை வேறுவிதமாக எடப்பாடி பழனிச்சாமி கையாள்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கைது நடவடிக்கை உடனே எடுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.
தனது கணவரை சந்திக்க பரோல் கேட்டுள்ள சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என்றே தமிழக உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறையில் சசிகலாவை தினகரன் பலமுறை சந்தித்திருந்தாலும் பர்சனலாக பல விஷயங்கள் பேசுச்வதற்கு வாய்ப்பிருந்திருக்காது.
எனவே பரோலில் வரும் சசிகலா தினகரனுடன் நிச்சயமாக மனம் விட்டு பேசுவார். இந்த சந்திப்பின் போது கட்சியை கைப்பற்ற தினகரனுக்கு ரகசியமாக சில ஆலோசனைகளை வழங்குவார். மேலும் கட்சி ரீதியாக சில அதிரடி முடிவுகளை எடுக்க தினகரனுக்கு சசிகலா ஆலோசனை வழங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சசிகலா வெளியே வரும்போது தினகரன் அவரை சந்திக்க முடியாத நிலையில் இருக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தினகரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வெளியே வரும் போது தினகரனை தேச துரோக வழக்கில் கைது செய்து உள்ளே தள்ள எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேச துரோக வழக்கு என்பதால் கைது செய்யப்பட்ட உடன் ஜாமீன் கிடைக்காது. சசிகலா பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்ற பின்னரே தினகரனுக்கு ஜாமீன் கிடைக்கலாம் எனவும் தகவல்கள் வருகின்றன.