கலைக்கப்படும் ஜெ. விசாரணை கமிஷன்?: அதிகாரம் இல்லாத அமைப்பு, விதிமீறல் என புகார்!
புதன், 4 அக்டோபர் 2017 (09:18 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் தற்போது இந்த விசாரணை ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா, தாங்கள் விசாரிக்க விரும்பும் நபர் அரசின் எந்த பொறுப்பில் இருந்தாலும் விசாரணை ஆணையத்துக்கு முன்பு வந்து வாக்குமூலம் வழங்க வேண்டும் என சம்மன் வழங்க அதிகாரம் படைத்த விசாரணை ஆணையம் தானா இது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு டெல்லி எயிம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் பீலே உள்ளிட்டவர்கள் மருத்துவம் அளித்தார்கள். மேலும் ஜெயலலிதாவை பார்க்க மருத்துவமனைக்கு, ஆளுநர், மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வந்தார்கள்.
இவர்களை போன்ற தேசிய ஆளுமைகளை விசாரிக்கும் அளவுக்கு இந்த விசாரணை ஆணையம் அதிகாரம் வாய்ந்ததா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆணையம் சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்ற அமைப்பல்ல என பல வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆணையத்தால் அரசுக்கு பரிந்துரை தான் வழங்க முடியும். அதனை ஏற்பதா வேண்டாமா, கிடப்பில் போடுவதா என்பது அரசு தான் முடிவு செய்யும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி இந்த விசாரணை ஆணையத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷனை ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான கே.எம்.விஜயன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் அதனை மனுவாக அளித்தால் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் கூறியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்ததில் விதிமீறல் நடந்துள்ளது என ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது.