தமிழக அரசியலில் மிக்கபெரிய மாற்றம் இருக்கப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், மீண்டும் முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க இருப்பதாக அதிமுக வட்டாரத்திலேயே பேசிக்கொள்கிறார்கள்.
கடந்த இரண்டு தினங்களாக தினகரனுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அதிமுக அம்மா அணியில் உள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
இத்தனை நாட்களாக தினகரன், சசிகலா ஆகியோரை புகழ்ந்தும், ஓபிஎஸ் அணியினரை துரோகிகள் என சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்த அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் அப்படியே மாற்றிப்பேச ஆரம்பித்துள்ளனர். தினகரன், சசிகலா உள்ளிட்ட அந்த குடும்பத்தினரை கட்சியில் இருந்து விலக்கி வைக்கிறோம், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என இறங்கி வந்துள்ளனர்.
இவர்களின் இந்த திடீர் முடிவுக்கும், மாற்றத்துக்கும் பின்னணியில் டெல்லி மேலிடம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே ஓப்பனாக பேசிக்கொள்கிறார்கள். தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாஞ்சில் சம்பத் கூட இதற்கு காரணம் பாஜக தான் என வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ராஜினாமா செய்துவிட்டு அனைத்தையும் ஓபிஎஸிடம் ஒப்படைக்க நெருக்கடி கொடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என டெல்லி எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி தரப்பும் ராஜினாமா செய்துவிட்டு ஓபிஎஸ்ஸை முதல்வராக தயாராகிவிட்டதாகவும், மேலும் முக்கியமான 5 அமைச்சர் பதவியையும் ஓபிஎஸ் அணி கோரிக்கையாக வைத்துள்ளதால் அது குறித்து எடப்பாடி அணி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.