தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறாமல் தமிழிசை சிரித்து சமாளித்தார்.
ஆனால், அங்கிருந்த பாஜகவினர் அந்த ஆட்டோ டிரைவரை, வயதானவர் என்றும் பாராமல் அடித்து இழுத்து சென்றனர். அவரின் கன்னத்தில் சிலர் அறைந்ததாக செய்திகள் வெளியானது. எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பாஜகவே பொறுப்பு என அந்த ஆட்டோ ஓட்டுனர் கதிர் பேட்டியும் அளித்திருந்தார்.
இந்நிலையில், துரைமுருகனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த அவர் “தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? இது ஜனநாயக நாடு. எவர் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். திமுகவினர் மேடையில் பேசும் போது கீழே இருந்து கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு திமுக தலைவர்கள் பதில் கூறிக்கொண்டே இருப்பார்கள். தமிழிசையை எனக்கு சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவர் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறார்” என அவர் கிண்டலடித்தார்.