கர்நாடகாவிலிருந்து கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை தேவை : ராமதாஸ்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (15:25 IST)
கர்நாடகாவிலிருந்து இன்னும் கூடுதல் தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனமர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10,000 கன அடி வீதமும், கபினி அணையிலிருந்து 5000 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.
 
காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த கர்நாடக அரசு உச்சநீதிமன்ற ஆணைக்கும், தமிழகத்தின் எதிர்ப்புக்கும் பணிந்து தண்ணீர் திறந்து விட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனாலும், இந்த வெற்றி போதுமானதல்ல. தமிழக காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி இன்னும் தொடங்கவில்லை. அடுத்த சில நாட்களில் விதைப்பு பணிகள் தொடங்கவுள்ள நிலையில், நவம்பர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் வரை , மேட்டூர் அணை தண்ணீரை வைத்து தான் பாசனத் தேவைகளை சமாளித்தாக வேண்டும். கடைமடை பாசனப் பகுதிகளுக்கு நீர் சென்றடைய வேண்டுமானால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தபட்சம் 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். 
 
அவ்வாறு தண்ணீர் திறந்து விட வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு 1.72 டி.எம்.சி. வீதம் 60 நாட்களுக்கு குறைந்தபட்சம் 103.2 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.
 
ஆனால், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடி, அதாவது 38 டி.எம்.சியாக இருந்தது. குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக அணையில் 35 அடி, அதாவது சுமார் 14 டி.எம்.சி இருப்பு வைக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை சம்பா பாசனத் தேவைகளை சமாளிக்க குறைந்தபட்சம் 79 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். மழை தொடங்கும் வரை தமிழகத்திற்கு வேறு நீர் ஆதாரங்கள் கிடையாது என்பதால் கர்நாடகத்திடமிருந்து தான் பெற்றாக வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலும், இன்று வரை தமிழகத்திற்கு 103.33 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும்.
 
ஆனால், சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழக எல்லைக்கு வந்துள்ளது. எனினும், தமிழகத்திற்கு நடப்பாண்டில் 33 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். அவரது கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் தமிழகத்திற்கு கர்நாடகம் இன்னும் 80 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். நவம்பர் மாதம் 7&ஆம் தேதி வரை கணக்கு வைத்துக் கொண்டால், கூடுதலாக 57 டி.எம்.சி., அதாவது 137 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும். உரிய மழை பெய்யவில்லை என்று அம்மாநில அரசு கூறுவதால் குறைந்தபட்சம் 80 டி.எம்.சி. தண்ணீரையாவது பெற்றாக வேண்டும்.
 
தமிழ்நாட்டிற்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தண்ணீரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழுவிடம் முறையிடுவதன் மூலம் தான் பெற முடியும். காவிரி வழக்கில் கடந்த 5&ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த 3 நாட்களில் காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தது. அதன்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழக அரசு இன்றைக்குள் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இன்று காலை வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் காவிரி மேற்பார்வைக் குழுவை உடனடியாக அணுக வேண்டும்.
 
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேரூந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப் பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன. 
 
அதேபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்காமல் தடுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளை அழைத்து வந்து தமிழர்களின் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அடுத்த கட்டுரையில்