மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வித்தியாசம் தெரியல..!? - விஜய்யை மறைமுகமாக தாக்கிய கனிமொழி!

Prasanth K

புதன், 9 ஜூலை 2025 (10:21 IST)

தூத்துக்குடியில் நடந்த திமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, அதில் தவெக குறித்து வைத்த மறைமுகமான விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தூத்துக்குடியில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, “இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்றார்கள் அதிமுகவினர். ஆனால் இப்போதோ தங்கள் வார்த்தைகளை மறந்து சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். யார் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்று சொன்னார்களோ அவர்களோடே போய் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை அதிமுக செய்திருக்கிறது.

 

39 தமிழக எம்.பிக்கள் சென்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்புவதையே பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க முயல்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள உங்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் எதெற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்.

 

சிலர் புதிதாக அரசியலுக்குள் வந்துவிட்டு ஜெயித்து விடலாம் என நினைத்து ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கு வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் ஆட்சி மாற்றம் வரும்போது சொல்கிறோம் என்று சொன்னோம். அது புரியாமல் அதை வைத்து அரசியல் செய்ய, ஓட்டுகள் பெற வந்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

 

முன்னதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் விஜய், தங்கள் கட்சி திமுகவுடனோ, பாஜகவுடனோ கூட்டணி அமைக்காது என்று கூறியிருந்தார். மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் கனிமொழி, விஜய்யைதான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்