இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Prasanth K

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (17:28 IST)

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளித்து திமுக அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை பாலைவனமாக மாற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தி வரும் நிலையில் அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியது. இது தொடர்பான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்யும்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனுமதிக்கப்படுவதை ஏற்க முடியாது.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக்குறைய 3000 அடி ஆழத்திற்கு அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் தான் இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழக அரசு நினைத்திருந்தால் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்த, மக்கள் மனதில் இருந்து இவை குறித்த நினைவுகள் விலகிய பிறகு, இராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் சதித் திட்டத்திற்கு திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்துள்ள துரோகம் ஆகும்.

 

காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும், மீத்தேன் எரிவாயு திட்டங்களையும் அனுமதிப்பது திமுகவுக்கு புதிதல்ல. 2010 ஆம் ஆண்டில் விவசாயிகளின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்ட்ரன் நிறுவனத்திற்கு அப்போதைய திமுக அரசு அனுமதி அளித்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு துரோகம் செய்திருந்தார். அதற்கு எதிராக பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், உழவர் அமைப்புகளும் தீவிர போராட்டம் நடத்தியதால் தான் அந்தத் திட்டம் அப்போது செயல்படுத்தப்பட வில்லை. இப்படியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரோகம் செய்வது திமுகவின் வாடிக்கை தான். ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதால் ஏற்படும் பாதிப்பு இராமநாதபுரம் மாவட்டத்துடன் மட்டும் நின்று விடாது. தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த இதுவரை 5 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி மொத்தம் 7250 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதையே காரணம் காட்டி அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி பெற ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் முயலும். அந்த முயற்சி வெற்றி பெற்றால், அதன்பின் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்