சபாநாயகர் தனபாலுக்கு சேலை, வளையல், பொட்டு: பார்சலுடன் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (10:10 IST)
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக தனபால் இருக்கிறார். அவருக்கு பொள்ளாச்சியில் இருந்து திமுகவினர் சேலை பார்சல் அனுப்பியது போன்ற புகைப்படம் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.


 
 
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதில் சபாநாயகர் தனது சட்டையை திமுகவினர் கிழித்ததாக குற்றம் சாட்டினார். ஆனால் சபாநாயகர் தன் சட்டையை தானே கிழித்துவிட்டு நாடகமாடுகிறார் என திமுகவினர் கூறினர்.


 
 
இந்நிலையில் திமுகவினரை வலுக்கட்டாயமாக சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் தாக்கப்பட்டதாகவும் தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்தார்.
 
ஸ்டாலின் தாக்கப்பட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து திமுகவினர் சென்னையில் உள்ள சபாநாயகர் தனபாலுக்கு சேலை, வளையல், பொட்டு போன்றவற்றை பார்சல் மூலம் அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்