சேலத்தில்சுயமரியாதைதிருமணம்செய்துகொண்டபெண்ணான இளமதியை மர்மக்கும்பல் கடத்திச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக எம்பி செந்தில்குமார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த செல்வன் என்ற இளைஞரும், குருப்பநாய்க்கம்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணும், ஒருவரையொருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர். காவலாண்டியூரில் திராவிடர் கழகத்தினர் முன்னிலையில் இவர்களது திருமணம் சுயமரியாதை திருமணமாக நடத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென அங்கு வந்த 40க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி தி.க பிரமுகர் ஈஸ்வரன் மற்றும் மணப்பென் மணமக்களையும் கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக கடத்தல்க்காரர்களை விரட்டி பிடித்து ஈஸ்வரனையும், செல்வனையும் மீட்டுள்ளனர். இளமதியை கடத்தி சென்றவர்களிடமிருந்து அந்த பெண்ணை மீட்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இளமதி கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவர் எங்கே என திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அவரது பேச்சில் ’ சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி மற்றும் செல்வன் ஆகிய தம்பதிகள் சிலரால் தாக்கப்பட்டனர். திருமணம் முடிந்த சில மணிநேரங்களில் இளமதி கடத்தப்பட்டார். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே அவரை மீட்க வேண்டும்.’ எனப் பேசியுள்ளார்.