சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தமிழகமே அப்பல்லோவை கூர்ந்து கவனித்து வருகிறது. அரசியல்வதிகள், தலைவர்கள், தொண்டர்கள் என அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வர மருத்துவமனை வளாகம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மற்றொரு திமுக எம்.எல்.ஏவான பெரியண்ணன் அரசுவும் திடீர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நலமுடன் அவரது வீட்டில் தான் இருப்பதாகவும், அவர் குறித்து வந்த செய்தி தவறானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.