டெல்லியில் கலவரம் நடந்து வரும் சூழலில் குரல் கொடுப்பேன் என சொன்ன ரஜினி எங்கே என திமுக எம்.எல்.ஏ ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். பல வீடுகள், கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த இந்த கலவரம் குறித்து அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், இன்றும் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இஸ்லாமியர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தருமபுரி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் இஸ்லாமியர்கள் டெல்லியில் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறி, இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் தெருவுக்கு வந்து போராடுவேன் என்று சொன்ன ரஜினி எங்கே? தன்னை தொப்பி இல்லாத இஸ்லாமியர் என சொல்லிக்கொண்ட ராமதாஸ் எங்கே? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பேசாததையும் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அவரது பதிவில் பதிலளித்துள்ள சிலர் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினே எந்த அறிக்கையும் விடாமல் இருக்கிறாரே என பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.