
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெறுப்பு அரசியலை செய்வதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எல்.முருகன் “மாமல்லபுரத்தில் இன்று தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு மீதும், பாஜக மீதும் வழக்கம் போல் வன்மத்தை கக்கியுள்ளார். ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியலை அரங்கேற்றி இருக்கிறார்.
வடக்கு-தெற்கு, டெல்லி- சென்னை என்று பிரிவினை பேசி, விஷத்தை பரப்பி, திமுக மீது கடும் கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என கனவு காண்கிறார். மத்திய அரசை எதிர்த்து பேசி சொந்தக் கட்சிகாரர்களிடம் திரு. ஸ்டாலின் கைத்தட்டல் வாங்கி விடலாம். ஆனால் தமிழக மக்களிடம் அவரால் வாக்குகளை வாங்க முடியாது.
மக்களை சுரண்டி, பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், நாட்டு மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தயாரா?
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊட்டச்சத்து முதல் டாஸ்மாக் வரை நடைபெறும் பல கோடி ரூபாய் ஊழல்கள். பாலுட்டும் குழந்தைக்கு செயல்படுத்தும் திட்டம் முதல் இடுகாட்டு கட்டிடம் கட்டும் வரை ஊழல். மேலும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் தினந்தோறும் நீதிமன்ற படி ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்களை பற்றி கவலையின்றி முழு நேரமும் முதலமைச்சரும் அவரது மகனும் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பருவமழை தொடங்கும் முன்பே நெல் கொள்முதலை தொடங்காமல் பல ஆயிரம் டன்கள் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டாண்டு காலமாக செய்து வரும் நெல் கொள்முதலை கூட சரியான முறையில் செய்யாமல் அலட்சியத்தில் இருக்கிறது இந்த திமுக அரசு. ஆனால், சினிமா இயக்குநர்கள், நடிகர்களை சந்தித்து பேச நேரம் இருக்கும் முதலமைச்சருக்கு, தன்னுடைய அரசின் அலட்சியத்தால் கொட்டும் மழையில் நெல் முளைத்து பெரும் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை.
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்பதை ஆட்சியின் குறிக்கோளாகக் கொண்டு திமுகவினர் செயல்படுகின்றனர். மீதமிருக்கும் 6 மாத காலத்திற்குள் மிச்ச மீதி இருப்பதையும் சுருட்டிவிட வேண்டும் என இவர்கள் துடிக்கின்றனர்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை இடதுசாரி கட்சிகள் ஆளும் கேரள மாநிலம் கூட ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் இழப்பு தமிழக மக்களுக்கு தான். சொந்தக் குடும்பம் குதூகலமாக வாழ்ந்தால் போதும், தமிழக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என எண்ணும் திமுகவினரிடம், மக்களின் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு குடும்பம் வளம் கொழித்து வாழ்வதற்காக, தமிழக மக்கள் நாள்தோறும் சொல்லொண்ணா துயரத்தில் தவிக்க வேண்டுமா என அதிமுகவின் நிறுவனர், அமரர் எம்ஜிஆர் அவர்கள் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களை பார்த்துக் கேள்வி கேட்டார். அது இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது.
ஒரு குடும்பம் நடத்தும் மன்னராட்சியின் கீழ் ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து தமிழகத்தில் எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களையும் உள்கட்டமைப்பு பணிகளையும் செய்து விடலாம். இவர்கள் தமிழக மக்களைச் சுரண்டி கொள்ளையடித்த பணத்தை வைத்து தமிழ்நாட்டின் மொத்தக் கடனையும் அடைத்து விடலாம்.
முதலமைச்சர் திரு. ஸ்டாலின் குடும்பமும், அவர்களின் சேவகர்களாக இருக்கும் குட்டி ஜமீன்தார்களின் குடும்பங்களும் கொள்ளையடித்து பல லட்சம் கோடியை சுருட்டுவது தான் திருட்டு திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தொடரும் என திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நம்புவது தான் வேடிக்கை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதி என்ன என்று மக்கள் அவரை கேட்கின்றனர். அவர் அதற்கு முதலில் பதில் சொல்லட்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மக்கள் மன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி தூக்கியெறிப்பட்டு தமிழகத்தில் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்வது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K