காலை வாறிய அதிமுக! - விஷம் குடித்த ரஜினிகாந்த்!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (13:54 IST)
தனது கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்து உள்ள தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் திருவள்ளூர் தேமுதிக கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பிய ரஜினிகாந்த் தங்களது கூட்டணி கட்சியான அதிமுகவின் திருவள்ளூர் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துள்ளார். அதிமுகவினரும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட ரஜினிகாந்துக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். புட்லூர் பகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தனது உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடமும் கூறி அனைவரின் ஆதரவையும் திரட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்குவதையொட்டி தனது சின்னத்தை பெற கட்சியினர் சகிதம் சென்றுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் அதிமுக நிர்வாகிகளோ புட்லூர் பகுதியில் அதிமுக போட்டியிட இருப்பதாக கூறி ரஜினிகாந்துக்கு வாய்ப்பை மறுத்துள்ளனர். மேலும் வெள்ளியூர் பகுதியில் அவரை போட்டியிடுமாறு கூறியுள்ளனர்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரஜினிகாந்த் வட்டார அலுவலகத்திலேயே எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு பிரச்சினையால் ரஜினிகாந்த் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்